கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.52½ லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.52½ லட்சத்துக்கு தானியங்கள் விற்பனையானது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த நெல், மக்காச்சோளம், உளுந்து, மணிலா, எள் உள்ளிட்ட தானியங்களை விற்பனைக்காக எடுத்து வருவார்கள். அந்த வகையில் நேற்று கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,700 -க்கும் மேற்பட்ட தானிய மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். தானியங்களை பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த விவசாயிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
அந்த வகையில் நேற்று எள் 750 மூட்டை என்கிற நிலையில் விற்பனைக்காக வந்திருந்தது. இதில் ஒரு மூட்டை எள் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 169 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 219 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதேபோல் மணிலா 20 மூட்டைகள் வந்திருந்தது. அதன் விலையானது ஒரு மூட்டை அதிகபட்சமாக 5 ஆயிரத்து 167 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 266 ரூபாய்க்கும், 750 மூட்டை மக்காச்சோளம் வந்திருந்த நிலையில், ஒரு மூட்டையின் அதிகபட்ச விலை ஆயிரத்து 356 ரூபாயாகவும், குறைந்த பட்ச விலை ஆயிரத்து 249 ரூபாயாகவும் இருந்தது.
மேலும் உளுந்து, கம்பு 50 மூட்டைகள் அதிகபட்சமாக விற்பனைக்காக வந்திருந்தது. இதில் உளுந்து ஒரு மூட்டை 4 ஆயிரத்து 607 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 4 ஆயிரத்து 469 ரூபாய்க்கும், கம்பு ஒரு மூட்டை அதிகபட்சமாக ஆயிரத்து 149 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் ஆயிரத்து 109 ரூபாய் என்கிற நிலையிலும் விற்பனையானது. வரகு 20 மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்த நிலையில் அதன் அதிகபட்ச விலையானது ஆயிரத்து 669 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் ஆயிரத்து 661 ரூபாய்க்கு விற்பனையானது. இபோன்று பல்வேறு தானியங்களை விவசாயிகள் விற்பனைக்காக எடுத்து வந்திருந்தனர். நேற்று மட்டும் 52 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு தானியங்கள் விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி கலைச்செல்வி தெரிவித்தார்.
Related Tags :
Next Story