சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்க கூடாது கலெக்டரிடம் மனு


சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்க கூடாது கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 Jun 2018 5:18 AM IST (Updated: 19 Jun 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி கிராமத்தில் சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்க கூடாது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

கல்யாணி கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு எங்களின் முக்கிய தொழில் ஆகும். எங்கள் பகுதியில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

எங்கள் பகுதியில் ஏற்கனவே நிலத்தடி நீரில் அதிகளவில் புளோரைடு கலந்து உள்ளது. எங்கள் கிராமத்திற்கு போதுமான அளவு காவிரி குடிநீர் வருவது இல்லை. இதனால் கிணறு, ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வருவதால், பொதுமக்களுக்கும், கால் நடைகளுக்கும் உடல்நலக்கேடு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கல்யாணி கிராமத்தில் சிலர் ரசாயன பொருட்களை பயன்படுத்தி சாயப்பட்டறை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் கழிவுகளை கசிவுநீர் குட்டையில் விட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

எங்கள் பகுதியில் சாயப்பட்டறை அமைந்தால், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும். எனவே பொதுமக்களின் நலன் கருதி எங்கள் பகுதியில் சாயப்பட்டறையோ அல்லது விவசாய தொழிலை பாதிக்கும் வேறு தொழிற்கூடமோ அமைக்க எவ்வித அனுமதியும் வழங்க வேண்டாம். இவ்வாறு இதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story