இணையதளத்தில் எல்லை மீறலாமா?


இணையதளத்தில் எல்லை மீறலாமா?
x
தினத்தந்தி 19 Jun 2018 10:38 AM IST (Updated: 19 Jun 2018 10:38 AM IST)
t-max-icont-min-icon

கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. வில் முனையை விட சொல் முனை வலிமையானது.

புரட்சியாளர்களும், தலைவர்களும் தங்கள் கருத்துகளை பேனா முனையில் உருக்கி எழுதி மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றியதன் விளைவாக ஆட்சி மாற்றங்கள், நாட்டு விடுதலை, சமுதாய புரட்சி என்று பல சம்பவங்கள் நடந்துள்ளதை நாம் அறிவோம்.

தற்போது பேனா முனைக்கெல்லாம் வேலையில்லை. விஞ்ஞானத்தின் விஸ்வரூப கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு விரல்களின் மீட்டலில் கணினிகளிலும், செல்போன்களிலும் கருத்துகளை விரைவாக எடுத்து வைக்கும் அவசரங்கள் அரங்கேறத்தொடங்கி விட்டன.

கடந்த காலங்களில் ஒருவர் கதை, கட்டுரை, கருத்துரை, விமர்சனம் ஆகியவற்றை எழுதுகிறார் என்றால், அதற்காக அவர் எழுதி எழுதி கிழித்துப்போடும் காகிதங்கள் அதிகமாக இருக்கும். இன்றைக்கு அந்த நிலை இல்லை. அதேநேரம் இன்று கருத்துகளின் கூர்மையும், அது அனைவரையும் சென்றடையும் நேரமும் குறைந்து விட்டது.

இரவுக்கு பகல் எப்படியோ, அதேபோல கருத்துக்கு எதிர்கருத்து எப்போதுமே உண்டு. கருத்துமோதல்கள் என்பது காலம் காலமாக உலக அளவில் இருந்து வரும் ஒரு கலை. அந்த கருத்து சுதந்திரம் என் பது எல்லை மீறும்போது பல மனங்களை காயப்படுத்தி விடுகிறது. சமுதாயத்தையே சில நேரங்களில் சீர்குலைத்துவிடுகிறது.

பாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும். குறிப்பாக ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்கு ஆக்கப்பூர்வமான பதில் சொல்ல முடியாத நிலையில், சிலர் ஆபாச வார்த்தைகளால் ‘கமெண்ட்’ செய்வதை பார்க்க முடிகிறது.

அது மட்டுமின்றி தங்களது தரப்பு பிரச்சினைகளை நியாயப்படுத்த கத்தரித்து கற்பனையுடன் தொகுக்கப்பட்ட படக்காட்சிகளை வெளியிடுகின்றனர். இதை பார்த்து உண்மை என்று நம்பி பலரும் தங்கள் கருத்துகளை பதிவிடும் சூழலும், கொதித்தெழும் நிலைமையும் நீடிக்கிறது.

அதை விடவும் மோசமாக தொலைக்காட்சிகளில் போடப்படும் அவசர செய்தி (பிரேக்கிங் நியூஸ்) பாக்ஸ்களை அப்படியே எடுத்து பொய் தகவல்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இது அவசர உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது பொய்யான தகவல் என்பதே பலருக்கும் தெரியாமல் முடிந்து போய்விடுகிறது என்பதுதான் காலக்கொடுமையாக உள்ளது.

அதுமட்டுமா, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் பெண் மற்றும் ஆண் அரசியல்வாதிகளின் அழகையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி மீம்ஸ் என்ற பெயரில் பதிவிடுகிறார்கள். கடந்த காலங்களில் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம் மற்றும் கருத்து சித்திரம் வரைந்து வெளியிடும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சித்திரங்களை பார்த்து சம்பந்தப்பட்டவர்களே சிரித்து இருக்கிறார்கள். காரணம் அதில் உள்நோக்கம் இருக்காது.

ஆனால் இன்று அந்த நிலை மாறிவருகிறது. சமூக ஊடகங்களில் வலம் வரும் கேலிச்சித்திரம் சம்பந்தப்பட்டவர்களை கோபமடையச்செய்கிறது. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு மன வலியையும் ஏற்படுத்துகிறது. இதனால் காவல் துறையில் புகார் கொடுக்கும் நிலைமைக்கு பலரும் தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் யாரோ ஒருவர் அனுப்பும் மோசமான கருத்து, பலரால் பகிரப்பட்டு விடுகிறது. இதில் யாரை பிடித்து காவல்துறை விசாரிக்கும்? இது இன்றைய காலத்தின் ஒரு கவலைக்குரிய விஷயமாகவே மாறி வருகிறது.

அதுமட்டுமின்றி தங்களுக்கு பிடிக்காத தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது, அவர்கள் இறந்து விட்டதுபோல கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை பதிவிடுவது போன்ற பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இது எப்படி கருத்து சுதந்திரமாகும்? சமூக வலைத்தளங்களில் உண்மை முகங்களை விடவும் பொய் முகங்களே அதிகமாக வெளிக்காட்டப்படுகிறது. இது இந்த சமுதாயத்தை அச்சுறுத்தும் மிகவும் ஆபத்தான அறிகுறி.

அதுமட்டுமின்றி ஒரு கருப்பு நிறமுடைய குண்டான ஆணும், சிகப்பு நிறம் கொண்ட ஒல்லியான பெண்ணும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நெல்லை அல்வா ஆப்பிரிக்காக் காரனுக்கு கிடைத்து உள்ளது என்று பதிவிடுகிறார்கள். அழகை யார் நிர்ணயிப்பது. ஒருவருக்கு அழகாக தெரியும் ஒன்று மற்றவருக்கு அவலட்சணமாக தெரியலாம். ஒருவருக்கு லட்டு பிடிக்கும், இன்னொருவருக்கு ஜாங்கிரி பிடிக்கும். இரண்டுமே இனிப்புதான். ஆனால் பொருள் வேறு அல்லவா?

மணப்பெண்கூட அந்த மாப்பிள்ளையை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனால் அதை பார்க்கும் மற்றவர் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த வன்மத்தை புகைப்படத்துடன் பதிவாக கொடுக்கிறார்கள். இதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும். அதை பதிவிடும் முன்பு நமது வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்தால், இப்படிப்பட்ட பதிவுகள் வெளியிடும் மனது யாருக்கும் வராது.

சமூக வலைத்தளம் என்பது பொழுதுபோக்குக்கும், பொது அறிவு தேடலுக்குமான களமாக இருக்க வேண்டும். போர் என்றால் கூட விதிமுறை உண்டு. ஒரு விளையாட்டு என்றாலும் ஒரு விதிமுறை உண்டு. விதிமுறை இல்லாத கருத்து சுதந்திரம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது.

எனவே, கருத்தை பதிவிடும் ஒவ்வொருவரும் அந்த கருத்தால் மற்றவருக்கு என்ன பயன்? என்று சிந்தித்து பதிவிடுவது முக்கியம். மற்றவர்கள் இதயத்தை குத்திக்கிழிக்கும் எந்த ஒரு கருத்தும் மனங்களை கொள்ளை கொள்ளாது என்பதை கருத்தில் கொண்டால், விரும்பத்தகாத, அருவருக்கத்தக்க கருத்துகளும், படக்காட்சிகளும், வீடியோ காட்சிகளும் வலைத்தளங்களில் வட்டமடிக்காது.

அது இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததிக்கும் ஒரு வழிகாட்டுதலாக அமையும். சமூக பொறுப்பு என்பது முதலில் தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்குகிறது என்பதை நாம் எப்போதும் மறந்து விடக்கூடாது.

-முத்துக்குட்டி 

Next Story