செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்தல் சாத்தியமே!


செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்தல் சாத்தியமே!
x
தினத்தந்தி 19 Jun 2018 7:54 AM GMT (Updated: 19 Jun 2018 7:54 AM GMT)

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்தல் சாத்தியமே என்று நாசாவின் இரட்டை ஆய்வில் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளது.

கற்பனைக்கு எட்டாத பலவும் நம் கைக்கு எட்டும் எந்திர யுகத்தில்தான் நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். தொழில்நுட்ப மற்றும் எந்திர வளர்ச்சி காரணமாக வானத்தின் பெரும்பகுதியும், அதிலுள்ள வேற்று உலகங்களும் மெல்ல மெல்ல மனிதனுக்கு வசப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் கனவுகளிலும், புனைவுகளிலும் இடம்பிடித்த வேற்று உலக இடங்களும், அவற்றின் விவரங்களும் அறிவியல் தகவல்களாக, புகைப்படங்களாக, வீடியோ/காணொளி காட்சி களாக நம் கண்முன்னே தினமும் விரிகின்றன.

அந்த வகையில், கடந்த பல வருடங்களாக அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட உலகின் பல விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் விருப்ப கிரகமாக/கோளாக இருப்பது செவ்வாய். முக்கியமாக, மனித செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக உயிர் வாழ்க்கைக்கான சூழலியலை நம் பூமியானது வேகமாக இழந்துவருகிறது. அதனால், மனிதனின் அடுத்த புகலிடமாக இருக்கப்போவது விண்வெளியில் உள்ள நிலவுகள் அல்லது கிரகங்களில் ஒன்றா அல்லது செவ்வாய் கிரகமா என்ற விவாதங்களும், கணிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற விவாதங்களுக்கும் கணிப்புகளுக்கும் வலு சேர்க்க, நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி (Curiosity rover) என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

மிகவும் சுவாரசியமாக, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு; செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது. இதன்மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதையும், அங்கு உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்றான கரி (carbon) மற்றும் அதன் இதர வகைகள் இருக்கின்றனவா என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிவதே கியூரியாசிட்டி ரோவரின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் முக்கியமாக, கடந்த 5 வருடங்களாக, செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. அந்த வரிசையில், தற்போது, செவ்வாய் கிரகம் குறித்த மேலும் இரண்டு முக்கியமான உண்மைகளைக் கண்டறிந்து அசத்தியுள்ளது கியூரியாசிட்டி! நாசாவின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பெரிய ஆய்வுகள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்த அறிவியல் தகவல்கள் Science எனும் பிரபல அறிவியல் ஆய்விதழில் சமீபத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் ஆய்வு: செவ்வாய் கிரகத்தில் உள்ள மீத்தேன் வாயுவின் அளவில் பருவகால மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன? என்பது கண்டறியப்பட்டுள்ளது! இயற்கை எரிவாயுவின் மூலமான மீத்தேன் வாயு பூமியிலுள்ள உயிரியல் அமைப்புகள் பலவற்றாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனடிப்படையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள மீத்தேன் வாயு அங்கு உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியாக இருக்க வேண்டும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கருதினார்கள்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மீத்தேன் வாயு இருப்பதை கியூரியாசிட்டி முதன்முதலில் கடந்த 2015-ம் ஆண்டு கண்டுபிடித்தது. ஆனால் அப்போது அது எங்கிருந்து உற்பத்தி ஆகிறது என்று கண்டறியப்படவில்லை. அதனைத்தொடர்ந்து கடந்த 2017-ம் இறுதியில், செவ்வாய் கிரகத்தில் உள்ள மீத்தேன் வாயுவானது வருடம் முழுக்க அளவில் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது கண்டறியப்பட்டது. இந்த மாற்றத்துக்கான காரணங்களைக் கண்டறிய கியூரியாசிட்டியால் சுமார் நான்கு வருடங்களாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் நாசாவின் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில், செவ்வாய் கிரக மேற்பரப்பிலுள்ள, மீத்தேன் கிளாத்ரேட்ஸ் (methane clathrates) என்று அழைக்கப்படும் உறைந்த பனிக்கட்டிகளில் இருந்துதான் மீத்தேன் வாயு வெளியாகிறது என்று கண்டறியப்பட்டது.

ஆக, செவ்வாய் கிரக கோடைக் காலத்தில் அங்குள்ள பனிக்கட்டிகள் உருகும்போது அவற்றிலுள்ள மீத்தேன் வாயு வெளியாகி, அதன் அளவுகள் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. முக்கியமாக, செவ்வாய் கிரகத்தின் பனிக்கட்டிகளில் பல நூற்றாண்டுகளாக உறைந்து இருந்த மீத்தேன் அங்கு வாழ்ந்திருக்கக் கூடிய உயிர்களால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர் நாசாவின் ஆய்வாளர்கள்.

இரண்டாவது ஆய்வு: செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் கிரேட்டர் (Gale Crater) எனப்படும் எரிமலை வாய் பகுதியின் இரண்டு இடங்களில் இருந்து, சுமார் 300 கோடி ஆண்டுகள் வயதுடைய மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அந்த மண் மாதிரிகள் கியூரியாசிட்டியால் சூடாக்கப்பட்டபோது, அதில், பூமியிலுள்ள கரிமம் நிறைந்த பாறைகளில் பரவலாக காணப்படும் பல கரிமப் பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக் கூடும் எனும் கருத்தை இந்த கண்டுபிடிப்பு மேலும் வலுப்படுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, 300 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியிலும் உயிர்கள் தோன்றின என்பதால், கிட்டத்தட்ட அதே சமயத்தில் செவ்வாய் கிரகத்திலும் உயிர்கள் தோன்றியிருக்கக்கூடும் என்கிறது நாசாவின் இந்த புதிய ஆய்வு! இதுவரை செவ்வாய் கிரக உயிர்கள் எதையும் கியூரியாசிட்டி நேருக்கு நேராக சந்திக்காத நிலையில், அங்கு உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கும் இந்த இரண்டு ஆய்வுகள் வரலாற்றுச் சிறப்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story