சத்தி அரசு போக்குவரத்து கழக பணிமனையை மாணவ– மாணவிகள் முற்றுகை


சத்தி அரசு போக்குவரத்து கழக பணிமனையை மாணவ– மாணவிகள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Jun 2018 10:30 PM GMT (Updated: 19 Jun 2018 6:42 PM GMT)

பஸ் இயக்க கோரி அரசு போக்குவரத்து கழக பணிமனையை மாணவ– மாணவிகள் முற்றுகையிட்டனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம் கரிதொட்டம்பாளையம். இந்த கிராமத்தை சேர்ந்த 40 மாணவ– மாணவிகள் தொட்டம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ– மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு வேன் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும் என கோரி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து மாணவ– மாணவிகள் கூறுகையில், ‘நாங்கள் அனைவரும் கரிதொட்டம்பாளையத்தில் இருந்து தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வருகிறோம். இதற்காக நாங்கள் அனைவரும் எங்கள் ஊரில் இருந்து எரங்காட்டூர் பிரிவு என்ற கிராமத்துக்கு 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கிறோம்.

பின்னர் அங்கிருந்து பஸ்சில் தொட்டம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு செல்கிறோம். நடந்து செல்வதால் சில நேரங்களில் பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. தாமதத்துக்கு எங்களிடம் ஆசிரியர்கள் காரணம் கேட்கிறார்கள். குறிப்பாக 6–ம் வகுப்பு படிப்பவர்கள் காலை மற்றும் மாலை என 2 நேரங்கள் எங்களுடன் நடந்துதான் வருகிறார்கள். சிறுவர்களான அவர்களுக்கு சீக்கிரமே பசி எடுத்துவிடுகிறது. எனவே மாலை நேரங்களில் வீட்டுக்கு வரும்போது அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டு வீட்டுப்பாடங்களை முடிக்க முடியாமல் போய்விடுகிறது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நாங்கள் முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

எனவே எங்கள் பகுதி மாணவ– மாணவிகளின் நலன் கருதி கரிதொட்டம்பாளையத்தில் இருந்து எரங்காட்டூர் பிரிவுக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய மாணவ– மாணவிகள், அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனர்.


Next Story