ஈரோட்டில் தி.மு.க. மாவட்ட செயலாளருடன் சபாநாயகர் சந்திப்பு, மனைவி மறைவுக்கு ஆறுதல் கூறினார்


ஈரோட்டில் தி.மு.க. மாவட்ட செயலாளருடன் சபாநாயகர் சந்திப்பு, மனைவி மறைவுக்கு ஆறுதல் கூறினார்
x
தினத்தந்தி 20 Jun 2018 4:30 AM IST (Updated: 20 Jun 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமியுடன் தமிழக சட்டசபை சபாநாயகர் சந்தித்து பேசினார். அப்போது முத்துசாமியின் மனைவி மறைவுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

ஈரோடு,

தி.மு.க.வின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி சமீபத்தில் மரணம் அடைந்தார். பல்வேறு அரசியல் கட்சியினர் முத்துசாமிக்கு ஆறுதல் கூறினார்கள். அவர் முன்பு அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புடன் அமைச்சராக பதவி வகித்து வந்ததால், அ.தி.மு.க. முக்கிய தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்தநிலையில் தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால், முத்துசாமியை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஈரோட்டிற்கு நேற்று வந்தார். அவர் ஈரோடு பெரியார்நகரில் உள்ள முத்துசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமியின் உருவப்படத்திற்கு சபாநாயகர் தனபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கும் அவர் மலர் தூவினார். பின்னர் அவர் சு.முத்துசாமியை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களுடன் அ.தி.மு.க., தி.மு.க. கட்சியினர் இருந்தனர்.

அதன்பிறகு சபாநாயகர் தனபாலும், முத்துசாமியும் சிறிதுநேரம் தனியாக உட்கார்ந்து பேசினார்கள். பின்னர் வீட்டில் இருந்து சபாநாயகர் வெளியே வந்தார். இந்த திடீர் சந்திப்பு குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு சபாநாயகர் தனபால், “நான் முத்துசாமிக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்து உள்ளேன். சபாநாயகராக இருப்பதால் அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவிக்க முடியாது”, என்று கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இந்த சந்திப்பின்போது, ஈரோடு கிழக்கு தொகுதி கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, ஜெகதீசன், கோவிந்தராஜ் உள்பட அ.தி.மு.க.வினர் உடனிருந்தனர். முன்னதாக பெரியார்நகர் வந்த சபாநாயகர் தனபாலுக்கு பகுதி செயலாளர் மனோகரன் வரவேற்பு அளித்தார்.

Next Story