ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2018 4:15 AM IST (Updated: 20 Jun 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி செயலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி வேலைநிறுத்த போராட்டத்திலும் ஏற்கனவே ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு வழங்குவதாக அரசு உறுதி அளித்தது.

ஆனால், இதுவரை ஊராட்சி செயலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கான அரசாணையும் வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சம்பள உயர்வுக்கான அரசாணை வெளியிடக்கோரி மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் மொத்தம் 969 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் ஊராட்சி செயலாளர்கள் உள்பட நேற்று மொத்தம் 788 பேர் விடுப்பு எடுத்தனர். இதனால் உதவி இயக்குனர் அலுவலகம், வளர்ச்சித்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதன் காரணமாக ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையே சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி செயலாளர்களுக்கு, அலுவலக பதிவறை எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.


Next Story