தலைமை ஆசிரியையை கண்டித்து அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்
வருசநாடு அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடமலைக்குண்டு,
தேனி மாவட்டம், வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக ஸ்ரீமதி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் சிங்கராஜபுரம் பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளியின் வாசல் கதவை பூட்டு போட்டு பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பள்ளிக்கு வந்த மாணவர்களை அதே பகுதியில் சாலையோர மரத்தடியில் பொதுமக்கள் அமர வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த வருசநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மேலும் பள்ளிக்கு தாமதமாக வந்து, சீக்கிரமே வீட்டுக்கு செல்வதாகவும் தலைமை ஆசிரியை மீது அவர்கள் புகார் கூறினர்.
இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே தற்போது இந்த பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் ஒருவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய கூடாது.
தலைமை ஆசிரியை மீது கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் சமரசம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் பள்ளியை திறந்து மாணவர்களை உள்ளே அனுப்பி வைத்தனர். விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.