மதுரை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை வஞ்சிக்கும் தென்மேற்கு பருவமழை


மதுரை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை வஞ்சிக்கும் தென்மேற்கு பருவமழை
x
தினத்தந்தி 20 Jun 2018 3:45 AM IST (Updated: 20 Jun 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

6 மாநிலங்களில் நீண்டு இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நல்ல மழை பெய்த நிலையில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள 70 கிலோ மீட்டர் நீளம் உள்ள மேற்குதொடர்ச்சி மலைகளில் மட்டும் மழை இல்லை.

பேரையூர்,

மேற்கு தொடர்ச்சி மலையானது குஜராத்தில் தாபி பள்ளத்தாக்கில் தொடங்கி மராட்டியம், கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா வழியாக மீண்டும் தமிழகத்தின் கன்னியாகுமரியில் முடிகிறது. மேற்கே அரபிக் கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை 6 மாநிலங்களில் நீண்டு இருக்கும் இந்த மலைகள் தடுத்து தென் மேற்கு பருவமழையாக பெய்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகள் மதுரை மாவட்டத்தில் 70 கிலோ மீட்டர் அளவில் அமைந்துள்ளது. சாப்டூர் வனப் பகுதி, உசிலம்பட்டி வனப்பகுதி இதில் அடங்கும். சந்தையூர், சாப்டூர், டி.கிருஷ்ணாபுரம், மல்லப்புரம், எழுமலை, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் மழை பொழிவு குறைவாக உள்ளன. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள பகுதிகளில் எல்லாம் மழை வெளுத்து வாங்கியுள்ளது. ஆனால் இங்கு மழை இல்லை.

அருகில் உள்ள திண்டுக்கல் தேனி போன்ற மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பொழிகிறது. மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நன்றாக கருமேகங்கள் சூழும். ஆனால் சிறிது நேரத்திலேயே மேகங்கள் கலைந்து விடுகிறது. கருமேகங்கள் சூழ்வதை பார்த்து விவசாயிகளும் மழை வரும் என்று நினைத்து பார்க்கும் வேளையிலேயே மேகங்கள் கலைந்து விடும் நிலைதான் உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் 50 ஆயிரம் ஏக்கரில் உள்ளது. இந்த பகுதி வறண்ட இலையுதிர் காடுகளாக உள்ளது. மழை மறைவு பகுதிகளாக உள்ளது. அதனால் தென்மேற்கு பருவமழை இங்கு அதிகமாக பெய்யாது. வெறும் சாரல் மட்டும்தான் பெய்யும். மழை வளம் பெற மலை அடிவாரப்பகுதிகளிலும், நிலப்பகுதிகளிலும் அதிகமாக மரங்களை வளர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார். கடந்த சில வருடங்களாகவே இந்த பகுதிகளில் கோடைமழை, தென்மேற்கு பருவமழை, பருவமழை போதிய அளவில் பெய்யாமல் வஞ்சித்து வருகிறது. இதனால் விவசாயம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்று விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story