சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கிறோம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 நாளில் உறுப்பினர்கள் நியமனம் குமாரசாமி அறிவிப்பு


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கிறோம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 நாளில் உறுப்பினர்கள் நியமனம்  குமாரசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2018 3:00 AM IST (Updated: 20 Jun 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கிறோம் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 நாளில் இரு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் முதல்–மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கிறோம் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 நாளில் இரு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் முதல்–மந்திரி குமாரசாமி கூறினார்.

குமாரசாமி பேட்டி

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்–மந்திரி குமாரசாமி கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். அங்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க கூடாது எனவும், இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி ஆகியோரையும் அவர் சந்தித்து கர்நாடக வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கவும், காவிரி விவகாரம் தொடர்பாகவும் கோரிக்கை விடுத்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பினார். இந்த நிலையில் நேற்று முதல்–மந்திரி குமாரசாமி பெங்களூருவில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:–

தனிப்பெரும்பான்மை கொடுக்கவில்லை

நான் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து காவிரி பிரச்சினை உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து பேசினேன். டெல்லியில் எதிர்பார்க்காத அளவுக்கு எனக்கு மரியாதை கிடைத்தது. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான் முதல்–மந்திரியாக பதவி ஏற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை.

தேர்தலுக்கு முன்பு, மக்கள் எங்கள் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கொடுத்தால் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக நான் கூறினேன். ஆனால் மக்கள் எங்கள் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கொடுக்கவில்லை. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து நான் முதல்–மந்திரி ஆகி இருக்கிறேன். ஆயினும் விவசாயிகளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அப்படியே விட்டுவிடமாட்டேன். விவசாய கடன் தள்ளுபடி வி‌ஷயத்தில் எனக்கு மூச்சு விடுவதற்கு கூட நேரம் கொடுக்காதது போல் உள்ளது.

பின்வாங்கமாட்டேன்

தேசிய வங்கிகளில் பத்திரங்கள் மூலம் ரூ.2 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த ரூ.2 லட்சம் கோடி தொழில் அதிபர்கள் வங்கிகளுக்கு திரும்ப செலுத்தாத கடன் ஆகும். அந்த ரூ.2 லட்சம் கோடியில் 25 சதவீதத்தை விவசாய கடன் தள்ளுபடிக்கு ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். இதை கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குறை கூறி இருக்கிறார்.

விவசாய கடனை தள்ளுபடி செய்வதில் இருந்து பின்வாங்கமாட்டேன். இதற்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அரசு துறைகளில் நிதி கசிவை தடுக்க வேண்டும். மாநில அரசின் நிதி ஒழுங்குமுறைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. அந்த திசையில் நான் பணியாற்றி கொண்டிருக்கிறேன். கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். இதில் இடைத்தரகர்கள் பயனடையக்கூடாது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதில் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறும்.

புகார் செய்யவில்லை

ராகுல் காந்தியை நேரில் சந்தித்து மாநில வளர்ச்சிக்கு சில ஆலோசனைகளை கேட்டு பெற்றேன். மற்றபடி யார் மீதும் நான் புகார் செய்யவில்லை. அவ்வாறு வெளியான தகவல்கள் தவறானது. கூட்டணி ஆட்சிக்கு ஒரு ஆண்டுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகின்றன. மந்திரி பதவி கிடைக்காததால் சில குழப்பங்கள் உண்டானது. அதனால் இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் கூறினார்கள். அதன் அடிப்படையில் நான் அந்த கருத்து கூறினேன்.

எனது தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகள் பதவி காலத்தை பூர்த்தி செய்யும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதி ஆகிய துறைகளில் பெரிய மாற்றம் ஏற்படுத்தப்படும். நான் மீண்டும் கிராமத்தில் தங்கும் திட்டத்தை தொடங்குவேன். இதன் மூலம் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்.

ஒப்புதலுக்காக அனுப்பினர்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் வி‌ஷயத்தில் இயற்றப்பட்டுள்ள ‘ஸ்கீம்‘ கர்நாடகத்திற்கு பாதமாக உள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை அந்த ஆணையம், அணைகளை ஆய்வு செய்து, தண்ணீர் திறக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடும். இந்த அம்சம் கர்நாடகத்துக்கு எதிரானது. இதை நீக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறி இருக்கிறோம்.

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த வி‌ஷயத்தை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும். இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 உறுப்பினர்களை நியமிக்குமாறு மத்திய அரசு கூறியது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் 2 பேரின் பெயர்களை இறுதி செய்து, அந்த கோப்புவை எனது ஒப்புதலுக்காக அனுப்பினர்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

காவிரி மேலாண்மை ஆணைய விதிமுறைகளில் கர்நாடகத்திற்கு பாதகமான, விஞ்ஞானத்திற்கு மாறான அம்சங்கள் இடம் பெற்று இருப்பதால் அதை நான் நிராகரித்தேன். இதனால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு வந்தாலும் அதை சந்திக்க நான் தயார் என்று அதிகாரிகளிடம் அப்போது கூறிவிட்டேன். சில வி‌ஷயங்களை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துவைக்க நாம் தவறிவிட்டோம். அதுபற்றி இங்கே விவரமாக கூற முடியாது.

ஆயினும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பை மதிக்க வேண்டியது அனைத்து மாநிலங்களின் கடமை. அதன் அடிப்படையில் அந்த தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 உறுப்பினர்கள் இன்னும் 2 நாளில் நியமனம் செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 177 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் தமிழ்நாட்டில் மழை நீர் மூலம் அணைகள் நிரம்பினாலும், கர்நாடகம் தண்ணீரை திறக்க வேண்டுமா?. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை.

அணையின் பாதுகாப்பு என்னவாகும்?

இப்போது கபினி அணை நிரம்பிவிட்டது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. உபரியாக உள்ள நீரை எங்கே வைத்துக்கொள்வது?. அதனால் அந்த உபரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அதிகாரிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தண்ணீரை திறக்காவிட்டால் அணையின் பாதுகாப்பு என்னவாகும்?.

சட்டசபை தேர்தல் முடிவு எனக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்தது. வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே எங்கள் கட்சி வெற்றி பெற்றது. பெங்களூருவில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குப்பை பிரச்சினையை நிர்வகிப்பதில் பெரிய மோசடியே நடக்கிறது. இதற்கு கடிவாளம் போடுவேன். மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

லஞ்சத்தை ஒழிப்பேன்

நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை இல்லை. கர்நாடக அரசு துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பேன். முதலில் எனது அலுவலகத்தில் இருந்தே இதை தொடங்குவேன். புதிய பட்ஜெட் தேவை இல்லை என்று கூறிய சித்தராமையாவின் கருத்து குறித்து மந்திரிசபையில் ஆலோசித்து முடிவு எடுப்பேன். மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு நடக்கும் தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு பிற மாநிலங்களின் முதல்–மந்திரிகள் என்னிடம் கேட்டனர். அதை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

--–

(பாக்ஸ்) தனி விமானத்தை பயன்படுத்தமாட்டேன் குமாரசாமி உறுதி

பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த குமாரசாமி கூறியதாவது:–

மாநில அரசின் துறைகளில் தேவையற்ற செலவை கட்டுப்படுத்த நான் முடிவு செய்துள்ளேன். அதனால் நான் சாதாரண விமானத்தில் தான் டெல்லி சென்றேன். சாதாரண விமானத்தில் டெல்லி சென்றால் ரூ.1 லட்சம் செலவாகிறது. இதே தனி விமானத்தை பயன்படுத்தினால் ரூ.38 லட்சம் வரை செலவாகிறது.

இதுபற்றி நான் டெல்லி சென்று இருந்தபோது ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு கேட்டார். ஏன் தனி விமானத்தை பயன்படுத்த வேண்டியது தானே என்றார். ஆயினும் நான் அவசர காலத்தை தவிர மற்ற நேரங்களில் தனி விமானத்தை பயன்படுத்த மாட்டேன். இந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story