நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை
நாகர்கோவில் அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலகிருஷ்ணன்புதூர்,
விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடியை சேர்ந்தவர் டொனால்டு (வயது 38), மீன்பிடி தொழிலாளி. அவருடைய மனைவி செல்வராணி (32). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க டொனால்டும் அவரது மனைவி செல்வராணியும் ஸ்கூட்டரில் மணக்குடியில் இருந்து தெங்கம்புதூர் சென்றனர். பின்னர், பொருட்களை வாங்கிவிட்டு அவர்கள் மீண்டும் மணக்குடியை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
மணக்குடி மேம்பால ரவுண்டானா அருகில் சென்ற போது, எதிரே கன்னியாகுமரியில் இருந்து தெங்கம்புதூர் நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் டொனால்டு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். செல்வராணி லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். விபத்து நடந்த உடனே டிரைவர் அங்கேயே லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி அறிந்ததும் அப்பகுதியில் நின்றவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த டொனால்டை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரி சக்கரத்தில் சிக்கி செல்வராணி பலியான தகவல் அறிந்த அவருடைய உறவினர்களும், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துப்பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பாரத்லிங்கம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டனர்.
நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து லாரி சக்கரத்தில் சிக்கி இருந்த செல்வராணியின் உடலை மீட்டனர். அப்போது, அங்கு திரண்டிருந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
செல்வராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த லாரியை சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்த மணக்குடி மேம்பாலப்பகுதியில் மின்விளக்குள் இல்லை. மேலும், அப்பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைக்காததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே மேம்பாலம் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கவும், ரவுண்டானா பகுதியில் பேரிகார்டுகள் அமைத்து போக்குவரத்து போலீசார் அங்கு வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், விபத்து அபாய பகுதி என்று எச்சரிக்கை பலகை அமைக்கவும், வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story