ஆந்திராவில் மின்சாரம் தாக்கி லாரி அதிபர் சாவு: இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்


ஆந்திராவில் மின்சாரம் தாக்கி லாரி அதிபர் சாவு: இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2018 11:30 PM GMT (Updated: 19 Jun 2018 10:06 PM GMT)

நாமக்கல்லை சேர்ந்த லாரி அதிபர் ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி நாமக்கல்லில் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள அணியாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). லாரி அதிபர். இவரே அந்த லாரியை ஓட்டியும் வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சென்னையில் இருந்து லோடு ஏற்றி சென்ற வெங்கடேஷ், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சென்றார்.

அங்கிருந்து லோடு கிடைப்பதற்காக காத்திருந்த வெங்கடேஷ், கடந்த 16-ந் தேதி தங்கி இருந்த அலுவலகத்தில் குளிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வெங்கடேசின் உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே இறந்துபோன வெங்கடேசின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் உடலை நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்துக்கு கொண்டு வந்தனர். சங்க அலுவலக வளாகத்தில் ஆம்புலன்சை நிறுத்தி, இழப்பீடு வழங்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சங்க தலைவர் சுந்தர்ராஜன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்து போன வெங்கடேஷ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினராக இருந்தால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற்று தர முடியும் என நிர்வாகிகள் கூறினர். இருப்பினும் தற்காலிக உறுப்பினராக இருந்தாலும் வெங்கடேசின் குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் நிதிஉதவி செய்ய உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story