காவலாளி சாவில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


காவலாளி சாவில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2018 4:30 AM IST (Updated: 21 Jun 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

காவலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே மானாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் (வயது 55). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காசிபில்லாம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மேலும், அவர் அங்கேயே அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் ஆறுமுகநயினாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகநயினார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் ஆறுமுகநயினாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மகன் சண்முகம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து இறந்த ஆறுமுகநயினாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அங்கு ஆறுமுகநயினாரின் உடல் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஆறுமுகநயினாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் பெருந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘ஆறுமுகநயினாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். அவர் இறந்தபிறகு தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர் யாரும் இங்கு வரவில்லை. மேலும், அவருடைய சாவிலும் சந்தேகம் உள்ளது. எனவே தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உரிய விளக்கம் அளிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்’’, என்றனர். அவர்களிடம் போலீசார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் மதியம் 2 மணிஅளவில் ஆறுமுகநயினாரின் உடலை பெற்றுக்கொண்டனர்.


Next Story