துப்பாக்கி சூடு நடந்து 30–வது நாள்: தூத்துக்குடியில் பலியான 13 பேரின் உருவப்படத்துக்கு வியாபாரிகள் அஞ்சலி போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உருவப்படத்துக்கு வியாபாரிகள் நேற்று அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி, போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உருவப்படத்துக்கு வியாபாரிகள் நேற்று அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி, போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் குவிப்புதூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்து நேற்று 30–வது நாள் ஆகும்.
இதைத்தொடர்ந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துவதாக தகவல்கள் வெளியானது. இதனால் தூத்துக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டனர். முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
புஷ்பாஞ்சலிதூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில், துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேருக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு வர்த்தக சங்க நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். வக்கீல் சொக்கலிங்கம், செந்தில்ஆறுமுகம் உள்பட வியாபாரிகள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க.தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி அலுவலகத்தில், துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் எட்வின்பாண்டியன், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், 13 பேரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் பாலன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், வக்கீல்கள் செல்வக்குமார், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்து 30–வது நாளையொட்டி நேற்று போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.