ஓட்டப்பிடாரத்தில் புதிய தீயணைப்பு நிலையம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
ஓட்டப்பிடாரத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தீயணைப்பு நிலையம்தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தீயணைப்பு நிலையத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நேற்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதற்கான விழா ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து அவர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டினார்.
விரைவில் புதிய கட்டிடம்பின்னர் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசுகையில், ‘ஓட்டப்பிடாரம் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்படுகிறது. இதனால் ஓட்டப்பிடாரத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று ஓட்டப்பிடாரத்தில் தற்போது புதிய தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது யூனியன் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் தீயணைப்பு நிலையத்துக்கு நிரந்தரமாக புதிய கட்டிடம் அமைக்கப்படும். இங்கு ஒரு நிலைய அலுவலர் தலைமையில் 17 தீயணைப்பு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்‘ என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், மண்டல துணை தாசில்தார் பிரபாகர், வருவாய் ஆய்வாளர் திருமணி ஸ்டாலின், யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் ஆணையாளர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.