விருத்தாசலம் அருகே மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே மணல்குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் உள்ள மணிமுக்தாற்றில் அரசு மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று விழுப்புரம் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் மணிமுக்தாற்றில் அளவீடு செய்து கற்கள் பதிக்கும் பணி தொடங்கியது.
இதுகுறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வக்கீல் மாயாமணிகண்டன் தலைமையில் மணிமுக்தாற்றுக்கு திரண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், மணிமுக்தாற்றில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் அனைத்தும் செயலிழந்து விட்டன. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினர்.
பின்னர் அதிகாரிகள், மணல் குவாரியை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எனவே நீங்கள் தாசில்தாரிடம் சென்று மனுகொடுங்கள் என்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறையினர் பொதுப்பணித்துறையினர் தற்காலிகமாக மணல் குவாரி அமைக்கும் பணியை நிறுத்துவதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.