தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடலூர்,
கடலூர் புதுப்பாளையம் மசூதிதெருவை சேர்ந்தவர் தயாளன் மகன் தீனதயாளன் (வயது 38). இவர் கடந்த 11–ந்தேதி ஆல்பேட்டை பெண்ணையாறு அருகே நடந்து சென்றார். அவரை புதுக்குப்பம் பகவந்தர் நகரை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பாருக்கான் (41) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, அவர் சட்டை பையில் இருந்த ரூ.500–யை வழிப்பறி செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் பாருக்கானை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வழிப்பறி செய்ததை ஏற்றுக்கொண்டதோடு, அக்கட்சி தலைவர் வேல்முருகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டித்து, கடந்த 10–ந்தேதி கம்மியம்பேட்டை டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும் தொடர்புடையவர் என தெரியவந்தது. இதையடுத்து பாருக்கானை போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
பாருக்கான் மீது ஏற்கனவே கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் உள்ளார். இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் தண்டபாணி உத்தரவின்பேரில் பாருக்கானை கடலூர் புதுநகர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.