தொண்டமாநத்தத்தில் பள்ளி அருகே தேங்கிய கழிவு நீரை அகற்றக்கோரி மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்
தொண்டமாநத்தம் கிராமத்தில் பள்ளி அருகே தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி மாணவர்களின் பெற்றோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனூர்,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி நின்றதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பள்ளியில் துர்நாற்றம் வீசியது. அதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டனர்.
அதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் அந்த பகுதி அதிகாரிகளிடம் அதுகுறித்து தெரிவித்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் கழிவுநீரை அகற்றாததை கண்டித்து நேற்று மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொண்டமாநத்தத்தில் பள்ளி அருகே சேதராப்பட்டு–பத்துக்கண்ணு சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த சாலையில் நடைபெற்ற போக்குவரத்து தடைபட்டது.
இந்த மறியல் பற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெற்றோர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.