பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்செந்தூர்,
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலையில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர், கோவில் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
யோகா கலையின் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். இதனை அனைத்து நாடுகளும் ஏற்று, ஆண்டுதோறும் உலக யோகா தின விழா கொண்டாடப்படுகிறது. பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சி அளிப்பது மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார். இதனால்தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தந்து இருக்கிறார். அவருக்கு தமிழ் சமுதாயம் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தது பயனற்றது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
வளர்ச்சி திட்டத்துக்கு எதிர்ப்பு
தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டமும் வரக்கூடாது என்று சில பயங்கரவாதிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர். தமிழகத்தில் எந்த திட்டங்களை செயல்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினையை உருவாக்கி, போராட்டத்தை தூண்டுகின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் நக்சல் அமைப்பினர் கைதானபோதும்கூட, அதுகுறித்து எந்த கட்சியினரும் பேச மறுக்கின்றனர். அவர்கள் பயங்கரவாதிகள் வழியில் செல்ல போகிறார்களா?.
கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு துணை போகிறவர்கள்தான். தமிழகத்தில் 10 பேர் மத்திய மந்திரிகளாக இருந்தபோதும் கொண்டு வரப்படாத திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வரும்போது எதிர்க்கிறார்கள்.
பா.ஜ.க.வின் வெற்றியை...
அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும். பா.ஜ.க.வுக்கு எதிராக எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பயன் இல்லை. அவர்களால் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை திட்டங்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்க முடியாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.