சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி


சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 22 Jun 2018 4:00 AM IST (Updated: 22 Jun 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச யோகா தினத்தையொட்டி ஊட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊட்டி,

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முருகன் தலைமை தாங்கினார். இதில், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். பயிற்சியாளர் சுமதி, மாணவர்களுக்கு யோகா ஆசனங்களை செய்து காட்டினார். இதில் தேசிய மாணவர் படை அலுவலர் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊட்டி கோடப்பமந்து பகுதியில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நேற்று காலை யோகா பயிற்சி வகுப்பு நடந்தது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் யோகாசனம் செய்து காண்பித்தார்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சார்பில், நர்சிங் மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.

ஊட்டி மனவளக்கலை மன்றம் சார்பில், யோகா தின நிகழ்ச்சி ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள யோகா மையத்தில் நடந்தது. இதில், 7 பள்ளிகளை சேர்ந்த 105 மாணவ-மாணவிகளுக்கு யோகாசன போட்டி நடந்தது. 9-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் நிவின் யோகாஆசனங்களை செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட தேசிய மாணவர் படை சார்பில், 12 பள்ளிகள், 2 கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 700 பேருக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. லெப்டினன்ட் கர்னல் ஜே.எம்.தேப் தலைமையில் அதிகாரிகள் பிரகாஷ், சுப்ரமணியன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்த னர். கேத்தி சி.எஸ்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரி, ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளி, குன்னூர் புனித அந்தோணியார் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பயிற்சியாளர் லலிதா மாணவ-மாணவிகளுக்கு ஆசனங்களை கற்றுக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.

குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் யோகா ஆசிரியை உமா மகேஷ்வரி யோகா பயிற்சிகளை செய்து காட்டினார். இதற்கு பள்ளி முதல்வர் சுதா தலைமை தாங்கினார். ஊட்டி ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story