திசையன்விளை அருகே போலீஸ் ஏட்டு மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு பொதுமக்கள் சாலைமறியல்
திசையன்விளை அருகே போலீஸ் ஏட்டு மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.
திசையன்விளை,
திசையன்விளை அருகே போலீஸ் ஏட்டு மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார். இதையடுத்து போலீஸ் ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தொழிலாளி சாவுநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலன்துலா காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தார். குமாரபுரம் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த திசையன்விளை போலீஸ் ஏட்டு குமார கிருஷ்ணன், அவரது சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கணேசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவத்தில் போலீஸ் ஏட்டு குமார கிருஷ்ணன், மதுபோதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டியதாக கூறப்படுகிறது.
சாலைமறியல்கணேசன் விபத்தில் இறந்ததை அறிந்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். போலீஸ் ஏட்டு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்குமார், வள்ளியூர் துணை சூப்பிரண்டு கனகராஜ், திசையன்விளை இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப்–இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக ஏட்டு குமார கிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் கணேசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.