பசுமை வழிச்சாலை: விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும், குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை


பசுமை வழிச்சாலை: விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும், குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2018 4:30 AM IST (Updated: 23 Jun 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

பசுமை வழிச்சாலை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது விவசாயி அழகேசன் பேசியதாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு கவுத்திமலையில் இருந்து இரும்புத்தாது எடுக்கும் திட்டத்தை அப்போது இருந்த கலெக்டர் தடுத்து நிறுத்தினார். பின்னர் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி அமைக்கும்போது கவுத்திமலையில் இருந்து இரும்புத்தாது எடுக்கும் திட்டம் கைவிடப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து தாம்பரம்-சேலம் வரை அமைக்கப்பட இருந்த சாலை திட்டம் கைவிடப்பட்டது.

இந்த திட்டம் தற்போது பசுமை வழிச்சாலை என்று செயல்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் பசுமை வழிச்சாலையில் நீளம் எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அகலம் எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள கிராமமக்கள் சாலையை எவ்வாறு கடப்பார்கள்.

சாலை அமைக்க மணல், ஜல்லி எங்கிருந்து கொண்டு வரப்பட உள்ளது போன்றவை குறிப்பிடப்பட வில்லை. நில உரிமை சட்டத்தின்படி நிலம் அளவீடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை. போலீசாரை கொண்டு துரிதமாக நிலம் அளக்கும் பணி நடைபெற்று வருகிறது.

போலீசாரை கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு ஏன் நிலுவைத்தொகை வாங்கி தர முன்வரவில்லை. திருவண்ணாமலையில் இன்னொரு தூத்துக்குடி சம்பவத்தை உருவாக்க அரசு வழி வகுக்கிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்ந்து அமைதி மாவட்டமாக இருக்க நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து விவசாயிகள் கூறுகையில், மழைகாலம் வருவதற்குள் தூர்ந்து போன ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். போளூரில் உள்ள சர்க்கரை ஆலை கடந்த 6 மாதங்களாக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்த ரூ.15 கோடியை வழங்காமல் உள்ளது. விழுப்புரத்தில் உள்ள சர்க்கரை ஆலையிலும் 5 மாதங்களாக விவசாயிகளிடம் கரும்பு கொள் முதல் செய்த தொகையை வழங்காமல் உள்ளது போன்றவை குறித்து பேசினர்.

தொடர்ந்து சாலையனூரை சேர்ந்த விவசாயி சேகர் பேசுகையில், பசுமை வழிச்சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு கூடுதல் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அழிக்கப்படும் கிணறுகளுக்கு பதிலாக மாற்று கிணறுகள் அமைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார். அப்போது பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில விவசாயிகள் சேகரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது சேகருக்கு ஆதரவாகவும் சில விவசாயிகள் பேசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக கலெக்டர் குறுக்கிட்டு, கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. நீங்கள் சொல்வதை தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணக் கூடாது. நீங்கள் பேசியபோது அவர்கள் எப்படி அமைதியாக இருந்தார்களோ, நீங்களும் அமைதியாக இருக்க வேண்டும். என்றார்.

Next Story