ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்


ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jun 2018 3:45 AM IST (Updated: 23 Jun 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி–குன்னூர் மலைப்பாதையில் மந்தாடா என்ற பகுதியில் கடந்த 14–ந் தேதி அரசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அரசு பஸ் விபத்தில் 9 பேர் உயிரிழப்புக்கு காரணமான சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் தலைமை கழக பேச்சாளர் அபுதாஹிர், ஊட்டி நகர செயலாளர் பைரோஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது நிருபர்களிடம் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. பழுது காரணமாக ஊட்டி மலைப்பாதையில் கோர விபத்து ஏற்பட்டு உள்ளது. அரசு பஸ்களை சரியாக பராமரிக்காத சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறவும், விபத்தில் படுகாயம் அடைந்தோர் தீவிர சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படி கொண்டு செல்லும் போது, உயிரிழக்க நேரிடுகிறது.

நீலகிரி மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2012–ம் ஆண்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110–விதியின் கீழ் நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை போன்ற வசதிகள் மருத்துவனையில் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், முழுமையாக தரம் உயர்த்தப்பட வில்லை. எனவே, மருத்துவமனையை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story