போடியில், தனியார் நிறுவனத்தை கண்டித்து ஏலக்காய் வியாபாரிகள் போராட்டம்
போடி ஏல மையத்தில் தனியார் நிறுவனத்தை கண்டித்து ஏலக்காய் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி,
மத்திய அரசின் நறுமண பொருட்கள் வாரியத்தின் கிளை அலுவலகம் போடியில் அமைத்துள்ளது. இங்கு மின்னணு முறையிலான ஏலக்காய் ஏலம் விடும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நறுமண பொருட்கள் வாரியம் ஏலக்காய் ஏல வர்த்தகத்தில் ‘எஸ்குரோ’, என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முறையில் ஏலக்காய் ஏலம் விட்டவுடன், அதனை ஏலத்தில் வாங்கிய வியாபாரி அதற்கான பணத்தை உடனே செலுத்த வேண்டும். மேலும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக அந்த பணம் வரவு வைக்கப்படும்.
பழைய முறையில் வியாபாரிகள் பணம் செலுத்த ஒரு வாரம் முதல் 15 நாள் வரை காலக்கெடு இருந்தது. புதிய திட்டம் குறித்து நறுமண பொருட்கள் வாரியம் கருத்து கேட்டதில் வியாபாரிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சில ஏல நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதில் கேரள மாநிலம் வண்டன்மேடு பகுதியில் உள்ள தனியார் ஏல நிறுவனம் புதிய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதியிருந்த கடிதத்தில் ஏலக்காய் வியாபாரிகளை ‘கருப்பு பணம் வைத்திருப்போர்’ என எழுதியிருந்தது.
இந்நிலையில் நேற்று ஏலக்காய் ஏலம் விடுவதற்கு வந்த அந்த தனியார் நிறுவன அதிகாரிகள் வந்து இருந்தனர். அவர்களிடம் நிறுவனம் கூறிய கருத்துக்கு மறுப்பு அறிவிக்கும்படி வியாபாரிகள் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் முடியாது என கூறினர். இதனால் அவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த ஏலக்காய் ஏலத்தை வியாபாரிகள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த நிறுவன அதிகாரிகள் வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்தனர். உடனே வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் காரணமாக ஏலம் விடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த ஏலத்தை வருகிற 26–ந்தேதிக்கு அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். இதன் காரணமாக ஏலக்காய் வியாபாரிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.