கிருமாம்பாக்கம் அருகே ஆயுதங்களை காட்டி மக்களை மிரட்டிய 3 பேர் கைது


கிருமாம்பாக்கம் அருகே ஆயுதங்களை காட்டி மக்களை மிரட்டிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2018 4:00 AM IST (Updated: 23 Jun 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் அருகே ஆயுதங்களை காட்டி மக்களை மிரட்டியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பேப்பர் மில் ரோட்டில் நேற்று முன்தினம் மாலை 3 வாலிபர்கள் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினார்கள். அதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, உதவி சப்–இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொது மக்களை மிரட்டியதாக கூறப்படும் 3 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் அவர்கள் பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான உதயக்குமார் (30), உதயமூர்த்தி (20) மற்றும் பேப்பர்மில் ரோட்டை சேர்ந்த பாலசந்தர் (வயது 19) என்பது தெரிய வந்தது. அதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, தடி உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story