விதான சவுதா அலுவலகத்தில் சிறப்பு பூஜை நடத்தி உயர்கல்வித்துறை மந்திரியாக ஜி.டி.தேவேகவுடா பொறுப்பு ஏற்றார்
விதான சவுதா அலுவலகத்தில் உயர்கல்வித்துறை மந்திரியாக ஜி.டி.தேவேகவுடா பொறுப்பு ஏற்றார். கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறினார்.
பெங்களூரு,
விதான சவுதா அலுவலகத்தில் உயர்கல்வித்துறை மந்திரியாக ஜி.டி.தேவேகவுடா பொறுப்பு ஏற்றார். கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறினார்.
புதிய இலாகா கிடைக்கும்கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாசராமி முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். முதல்–மந்திரி, துணை முதல்–மந்திரி தவிர 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். அதில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவேகவுடாவும் ஒருவர் ஆவார். இவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அவர் 8–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் அவருக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. தனக்கு போதிய கல்வி தகுதி இல்லாததால், உயர்கல்வித்துறையை நிர்வகிப்பது கடினம் என்று கட்சி தலைவர்களிடம் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாயின.
குமாரசாமி மற்றும் தேவேகவுடாவை நேரில் சந்தித்து பேசிய அவர், தனக்கு உயர்கல்வித்துறை வேண்டாம் என்றும், விவசாயிகளுக்கு சேவையாற்றும் வகையில் இலாகாவை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து பரிசீலிப்பதாக குமாரசாமி உறுதி அளித்ததாக ஜி.டி.தேவேகவுடா கூறினார். இதனால் தனக்கு புதிய இலாகா கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். இதையடுத்து அவர் உயர்கல்வித்துறை பொறுப்பை ஏற்காமல் இருந்து வந்தார்.
முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர்இந்த நிலையில் ஜி.டி.தேவேகவுடாவை அழைத்து பேசிய தேவேகவுடா, தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர் படிக்காதவர். அவர் முதல்–அமைச்சராக சிறப்பான முறையில் பணியாற்றவில்லையா? என்றும், அதனால் உயர்கல்வித்துறை பொறுப்பை ஏற்குமாறும் கூறினார். இதையடுத்து ஜி.டி.தேவேகவுடா உயர்கல்வித்துறை பொறுப்பை ஏற்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில் பெங்களூரு விதான சவுதாவின் 3–வது மாடியில் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலக அறையில் நேற்று உயர்கல்வித்துறை மந்திரியாக ஜி.டி.தேவேகவுடா பொறுப்பை ஏற்றார். அந்த அலுவலகத்தில் அவர் சிறப்பு பூஜையை நடத்தினார். இதில் அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உயர்கல்வித்துறை பொறுப்பை ஏற்ற பிறகு ஜி.டி.தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சிறப்பான முறையில் நிர்வகிப்பேன்உயர்கல்வித்துறை பெரிய இலாகா ஆகும். இந்த இலாகாவை நான் குறைத்து மதிப்பிட்டு பேசவில்லை. கல்வி நிபுணர்களின் கூட்டத்தை கூட்டி அவர்களின் ஆலோசனைகளை பெற்று உயர்கல்வியின் தரத்தை மேலும் அதிகரிக்க பாடுபடுவேன். மாநிலத்தில் தற்போது 25 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி படிக்கிறார்கள். இந்த உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்வேன்.
உயர்கல்வித்துறையை சிறப்பான முறையில் நிர்வகிப்பேன். கிராம மக்களுடன் இருக்க வேண்டும், அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நான் கருதினேன். நான் 8–ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். இவர் எப்படி உயர்கல்வித்துறையை நிர்வகிக்கப்போகிறார் என்று சிலர் கூறினர். எனது தந்தை மரணம் அடைந்ததால் என்னால் தொடர்ந்து கல்வி பயில முடியவில்லை.
கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்விஆனால் எனது குழந்தைகள் நல்ல கல்வியை பெற்றுள்ளனர். கல்வியாளர் ரங்கப்பாவை உயர்கல்வித்துறை ஆலோசகராக நியமித்துக்கொள்ளும்படி முதல்–மந்திரி கூறவில்லை. வருவாய், நீர்ப்பாசனத்துறைகளை ஒதுக்குமாறு நான் கேட்டேன். ஆனால் இந்த இலாகாக்கள் காங்கிரசுக்கு சென்றுவிட்டன. இனி வேறு இலாகாக்களை ஒதுக்குமாறு கேட்க மாட்டேன். கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வசதி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு ஜி.டி.தேவேகவுடா கூறினார்.