தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம்: கலவர பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு தடயங்களை சேகரித்தனர்
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் நடந்த பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் நடந்த பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
துப்பாக்கி சூடுதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மாதம் 22–ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.
இந்த கலவரம் தொடர்பான 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டன. இதற்கிடையே சென்னையில் இருந்து காவல்துறை தடய அறிவியல் துறையின் கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசர் தலைமையில் 4 அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்தனர். அதேபோல் சென்னையில் இருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சிலரும் தூத்துக்குடிக்கு வந்தனர்.
ஆய்வுஅவர்கள் அனைவரும் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் நடந்தது.
பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடிகுண்டுகளை கண்டறிந்து அதனை தடுக்கும் பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் போன்ற கருவிகளை கொண்டு அந்த பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
தடயங்கள் சேகரிப்புஅதன்பிறகு தமிழகம் முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட 100–க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் நடந்த இடங்களில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலை வளாக குடியிருப்பு பகுதிகளிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.