உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த கோவில் காளையை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்த கிராம மக்கள்
குஜிலியம்பாறை அருகே, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த கோவில் காளையை, அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து சென்று மரியாதையுடன் கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பில்லமநாயக்கர் (வயது 60). இவர், 23 ஆண்டுகளாக ஒரு காளையை வளர்த்து வந்தார். அந்த பகுதியில் மாலை கோவில் என்ற அவர்களின் குலதெய்வ கோவில் உள்ளது. பில்லமநாயக்கர் வளர்த்து வந்த காளை கோவில் காளை ஆகும்.
இதனால் அந்த காளைக்கு, ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின்போது, மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். மேலும் தை மாதம் 1–ந்தேதி, அந்த காளைக்கு மாலை, துண்டு உள்ளிட்டவை அணிவித்து, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்படும். அந்த காளை திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின் போது நடைபெறும் ‘சலையெருது‘ (காளை மாட்டு ஓட்டம்) போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.
கோவில் காளை என்பதால் ஊர் பொதுமக்கள் அனைவரும் அதற்கு தீவனம் கொடுத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில், கோவில் காளைக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அந்த காளை இறந்தது. இதனால் ஊர்மக்கள் அனைவரும் சோகமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள், இறந்த மாட்டை குளிப்பாட்டி, உடல் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி, மாலை அணிவித்து அலங்கரித்தனர்.
மேலும் மஞ்சள் துணி போர்த்தி, காளைக்கு முன்பு கொழுக்கட்டை, பால், எலுமிச்சம்பழம், நவதானியங்கள் ஆகியவற்றை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையடுத்து காளையை மாலை, மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டுசென்று காளியம்மன் கோவில் அருகே குழி தோண்டி உடலை அடக்கம் செய்தனர்.
இதில், குஜிலியம்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக காளை மாட்டின் மீது பொதுமக்கள் தங்களால் முடிந்த பணத்தை காணிக்கையாக வைத்தனர். அந்த பணத்தை கொண்டு, காளை கன்று ஒன்றை வாங்கி மாலை கோவில் காளையாக வளர்க்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த 19–ம் தேதி குஜிலியம்பாறை அருகே உள்ள தங்கம்மாபட்டியில் அல்லிமுத்து என்பவர் வளர்த்து வந்த கோவில் காளை இறந்த நிலையில் மீண்டும் மற்றொரு கோவில் காளை நேற்று இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.