மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியல்: 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 656 பேர் கைது
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 656 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்துக்கு ஆய்வு செய்ய சென்றார். அப்போது, கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையிலான தி.மு.க.வினர் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டினர். இதையடுத்து, எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 192 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை கண்டித்து நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வினர் சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை தடுத்த போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இதேபோல மாநிலம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் இருந்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமையிலான தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர், கவர்னர் மற்றும் முதல்–அமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி பஸ்நிலையம் முன்பு வந்தனர். இதையடுத்து அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது இ.பெரியசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் பா.ஜ.க.வின் இரட்டைமுறை ஆட்சி நடக்கிறது. கவர்னருக்கு கருப்பு கொடி காட்டியவர்களை சிறையில் அடைத்தது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் ஆகும். அனைத்து இயக்கங்களின் ஜனநாயக உரிமைக்காக தி.மு.க. போராடுகிறது. இதன் விளைவுகள் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் இ.பெரியசாமி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டி அம்பலம் மற்றும் மாநில மகளிர் அணி துணை செயலாளர் நூர்ஜகான் பேகம், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் உள்பட 260 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமையில் புது தாராபுரம்–பழனி சாலையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற கீரனூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொன்ராஜ் உள்பட 250 பேரை கைது செய்தனர்.
இதேபோன்று பழனி பஸ்நிலையம் அருகே தி.மு.க. நகர செயலாளர் தமிழ்மணி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட தி.மு.க. நகர செயலாளர் தமிழ்மணி, முன்னாள் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி உள்பட 50 பேரை பழனி போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் அருகே நகர துணை செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 71 பேரை போலீசார் கைது செய்தனர். நத்தம் பஸ்நிலையம் அருகில் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் கலந்து கொண்ட பேரூர் செயலாளர் முத்துக்குமாரசாமி, முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் குப்புசாமி, முன்னாள் கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதன்படி, நேற்று மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்ட 656 பேரும் அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.