மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாண்லே பாலகத்தின் பூட்டை உடைத்து நெய் பாட்டில்கள் திருட்டு
மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாண்லே பாலகத்தின் பூட்டை உடைத்து நெய் பாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுவை மறைமலை அடிகள் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் பாண்லே பாலகம் உள்ளது. இங்கு பால், தயிர், நெய், ஐஸ்கிரீம்கள், பாதாம் பவுடர் உள்பட பாண்லே நிறுவனம் தயாரிக்கும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் ஊழியர் நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு 9.45 மணியளவில் பணிகளை முடித்து விட்டு பாண்லே பாலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை அவர் மீண்டும் பணிக்கு வந்தார். அப்போது பாண்லே பாலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த நெய் பாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவு பாண்லே பாலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்து நெய் பாட்டில்களை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 ஆயிரம் ஆகும்.
இது குறித்து அவர் பாண்லே நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்லே பாலகத்தில் நெய் பாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.