மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் 4 இடங்களில் தி.மு.க.வினர் சாலைமறியல்


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் 4 இடங்களில் தி.மு.க.வினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 24 Jun 2018 4:15 AM IST (Updated: 24 Jun 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் பஸ் நிலையம் அருகே முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகரப் பொறுப்பாளர் மணிமாறன், பொதுக்குழுஉறுப்பினர் மாயவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும் தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 22 பேரை நாமக்கல் போலீசார் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

சென்னையில் தி.மு.க.செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நாமக்கல் வந்த கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்யக்கோரியும் ராசிபுரத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

இந்த மறியல் போராட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி அரங்கசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அருள், முன்னாள் கவுன்சிலர் ராஜம்மாள், வக்கீல் கீதாலட்சுமி, முன்னாள் நகர அவைத்தலைவர் ராமசாமி, ராசிபுரம் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி சரவணன், அரசாபாளையம் ஊராட்சி செயலாளர் ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியல் செய்த 20 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து எருமப்பட்டி கைகாட்டியில் தி.மு.க. சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு நகர செயலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. பேச்சாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பரமசிவம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் அறிவழகன் மற்றும் பெரியசாமி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் பேராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை எருமப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல பரமத்தி வேலூரில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 14 பேர் கைது செய்யப்பட்டனர். 

Next Story