தெய்வத்தை அவமதிப்பு செய்பவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தெய்வத்தை அவமதிப்பு செய்பவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 25 Jun 2018 4:45 AM IST (Updated: 25 Jun 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

தெய்வத்தை அவமதிப்பு செய்பவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை அமைக்க உள்ள மத்திய அரசுக்கு, தமிழக மக்கள் நன்றி கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மதுரையில் அமைப்பதற்கு நாங்கள் தான் காரணம் என்று சிலர் சொல்லிக்கொள்கிறார்கள். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படியே, மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், தி.மு.க.செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். கோவிலின் மேற்கு வாசல் வழியாக உள்ளே சென்ற அவருக்கு, சாமியின் கழுத்தில் கிடந்த மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்பாள் பிரசாதமும் நெற்றியில் பூசப்பட்டுள்ளது. ஆனால், நெற்றியில் பூசப்பட்ட சாமியின் பிரசாதத்தை மு.க.ஸ்டாலின் அழித்துள்ளார். இது வருத்தம் அளிக்கக்கூடிய செயல்.

இறை நம்பிக்கை உள்ள எந்த மதத்தினரும், எந்த கோவிலுக்கும், எந்த ஆலயத்திற்கும் சென்று வழிபட உரிமை உண்டு. ஆனால், இறை நம்பிக்கை உள்ளது போன்று வேடம் போடக்கூடியவர்கள், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக கோவிலுக்குள் சென்று தெய்வத்தை அவமதிப்பு செய்பவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது. அந்த பட்டியலில் மு.க.ஸ்டாலின் சேர்ந்துள்ளார். தெய்வத்தை அவமானப்படுத்தியதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு நபருக்கு மரியாதை செய்வதற்காக ஏற்பாடு செய்தது யார்? கோவிலின் ஆகம விதிகள் மீறப்பட்டதா? என்பது குறித்து அறநிலையத்துறை விளக்கம் அளிக்கவேண்டும்.

பெரியார் கூட இறைநம்பிக்கை அற்றவர்தான். ஆனால், குன்றக்குடி அடிகளார் ஒருமுறை அவருக்கு பூரணக்கும்ப மரியாதையுடன் நெற்றியில் திருநீறு அணிவித்து வரவேற்ற போது அதை அவர் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், இறை நம்பிக்கை உள்ளவர்களை காயப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இந்த நாகரிகம் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

தற்போது சமூகத்தில் பயங்கரவாத செயல்கள் நிகழ்ந்து வருகின்றன. பயங்கரவாதிகள் செயல்பாடு குறித்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அவரிடம்நான் எடுத்துக்கூறியுள்ளேன். அன்றைக்கு, பயங்கரவாதிகளுக்கு அச்சம் இருந்தது. ஆனால் இன்றோ, சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே வீடியோவை பதிவு செய்து வெளிவிடும் நிலைக்கு வந்துவிட்டனர். பயங்கரவாதிகள் மீது மத்திய அரசு தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் கவர்னர் தன் அதிகாரத்துக்கு உட்பட்டே செயல்படுகிறார். அவரை கொச்சைப்படுத்த நினைக்கிறவர்கள் தான் வேண்டுமென விமர்சித்து வருகின்றனர்.

8 வழிச்சாலை திட்டம் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நிறைவேற்ற என்ன செய்யவேண்டுமோ அதை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரியில் துறைமுகம் கண்டிப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story