ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.69 லட்சம் மோசடி
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.69 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை வண்டியூரை சேர்ந்தவர் முகுந்தகுமார். இவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பவரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் தான் ஈடுபட்டு வருவதாகவும், அதில் பலமடங்கு லாபம் ஈட்டுவதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் நீங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய வெங்கடேசன் மற்றும் உறவினர்கள் என பலர் மொத்தம் 69 லட்சம் ரூபாயை முகுந்தகுமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த பணத்துக்கு ஈடாக எந்தஒரு ஆவணமும் வழங்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி வெங்கடேசன் மற்றும் உறவினர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் முகுந்தகுமார், அவருக்கு உதவியாக இருந்த அவரது தாயார் விஜயலட்சுமி, மனைவி சிவமணி, சகோதரர்கள் நந்தகுமார், கமலகண்ணன், அரவிந்தகுமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.