தூத்துக்குடி சம்பவத்தில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு


தூத்துக்குடி சம்பவத்தில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சம்பவத்தில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் சந்திரசேகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22–ந்தேதி நடந்த பேரணியின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 96 பேரை பிடித்துச்சென்று புதுக்கோட்டை போலீஸ்நிலையத்திலும், வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்திலும் சட்ட விரோத காவலில் வைத்தனர். இவர்களில் வக்கீல் ஒருவரும் உண்டு. இந்த சட்ட விரோத காவல் குறித்து தூத்துக்குடி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளித்தேன். அதன்பேரில் அவர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தும்படி விளாத்திகுளம் நீதிபதிக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் நீதிபதி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியபோது வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் 94 பேர் சட்ட விரோத காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது..

அந்த இடத்தில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பணியில் இருந்தனர். அங்கு 94 பேரும் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை. பின்னர் அவர்களில் 29 பேர் விடுவிக்கப்பட்டனர். எஞ்சியுள்ள 65 பேர் மீதும் 24 மணி நேரத்திற்கு பின்னர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது விதிகளுக்கு புறம்பானது.

எனவே கடந்த மாதம் 22, 23–ந்தேதிகளில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முறப்பநாடு, புதுக்கோட்டை எல்லைக்கு உட்பட்ட போலீஸ்நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை, நீதிபதிகள் துரைச்சாமி, அனிதாசுமந்த் ஆகியோர் நேற்று விசாரித்து ஒருவாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story