விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:30 AM IST (Updated: 26 Jun 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி காலனி பகுதியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் பல மாதங்களாக இப்பகுதியில் உள்ள மேடான பகுதிகளில் சரிவர குடிநீர் வருவதில்லை. இதனால் வழுதரெட்டி மெயின்ரோடு பகுதியில் உள்ள குழாய்க்கு வந்து தண்ணீர் பிடித்துச்செல்கின்றனர். இருப்பினும் போதுமான குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் வழுதரெட்டி காலனி பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலும் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக காட்சியளிப்பதோடு கொசுக்கள் உற்பத்தியாவதால் அப்பகுதி மக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரியும், கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்– திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடாமல் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகளை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு, வழுதரெட்டி காலனி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரவும் உடனே நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் காலை 9.50 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.


Next Story