முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
விருத்தாசலம் அருகே முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே படுகளாநத்தம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று அரிசியும், எண்ணெயும் வழங்கப்பட்டது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் ரேஷன் கார்டுடன், பொருட்கள் வாங்க கடைக்கு விரைந்து வந்தனர். அப்போது ஊழியர், கிராம மக்களுக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்தார்.
இந்த நிலையில் சரியாக எடை போட்டு அரிசி வழங்கவில்லை எனவும், புழுங்கல் அரிசிக்கு பதிலாக பச்சை அரிசி வழங்கப்படுவதாகவும் கிராம மக்கள் புகார் கூறினர். இதனால் விற்பனையாளர் ரேஷன் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ரேஷன் பொருட்கள் முறையாக வழங்க கோரி கடை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.