விளைநிலங்களில் உயர்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம்


விளைநிலங்களில் உயர்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:00 AM IST (Updated: 26 Jun 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலங்களில் உயர்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் தமிழக அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று சிறு–குறு விவசாயிகள் சங்க தலைவர் கூறினார்.

மொடக்குறிச்சி,

விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 25–ந் தேதி மொடக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக சிறு–குறு விவசாயிகள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று மொடக்குறிச்சி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தமிழக சிறு–குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு தலைமையில் முன்னாள் எம்.பி. அ.கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சு.குணசேகரன், கொ.ம.தே.க. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், காலிங்கராயன் பாசனசபை தலைவர் வி.எம்.வேலாயுதம் உள்பட விவசாயிகள் பலர் திரண்டனர்.

ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் மொடக்குறிச்சி நால்ரோட்டில் இருந்து தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். மேலும் தாசில்தார் அசரபுனிஷாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுகுறித்து தமிழக சிறு–குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:–

பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் விவசாய விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஒரு மின் கோபுரத்திற்கும் மற்றொரு மின் கோபுரத்திற்கும் இடையில் 30 ஏக்கர் விவசாய நிலங்கள் எதற்கும் பயனின்றி வீணாகிறது. விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதுடன் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படைகிறது. உயர்மின் கோபுரம் அமைக்க ஒரு அடி நிலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம். விவசாய நிலத்தில் குறியீடு செய்யவும், விவசாயிகள் எதிர்பை மீறி உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியையும் பவர் கிரிட் நிறுவனம் கைவிட வேண்டும்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு திடீர் தடை விதித்த தமிழக அரசு, வருகிற 27–ந் தேதி (நாளை) சென்னை தலைமை செயலகத்தில் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாவிட்டால் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இதில், உண்ணாவிரதம், சாலை மறியல், தர்ணா, பட்டை நாமம் போடும் போராட்டம், கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story