கொள்முதல் நிறுத்தம்: தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம், விவசாயிகள் சங்கம் முடிவு
விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலையை கொள்முதல் செய்து வருகின்றன.
கோத்தகிரி,
நீலகிரி மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தும்பூர் ஐ.போஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டள்ளதாவது,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகள், சிறு விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலையை கொள்முதல் செய்து வருகின்றன. இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள விலை நிர்ணய குழு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை விவசாயி களுக்கு கட்டுபடியாகாத விலையாக இருப்பினும் விவசாயிகள் இந்த விலையை பெற்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகள் விலை நிர்ணய குழு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையை கூட வழங்காமல் முன்பணம் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். மீதமுள்ள நிலுவைத் தொகையை வழங்க தாமதப்படுத்தி வருவதால் சிறு தேயிலை விவசாயிகளின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம், பசுந்தேயிலை கொள்முதலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் பல தேயிலை தொழிற்சாலைகள் பசுந்தேயிலையை கொள்முதல் செய்து வருகின்றன. குறிப்பிட்ட ஒரு சில தொழிற்சாலைகள் பசுந்தேயிலையை கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த விவாகரத்தில் தேயிலை வாரியம் உடனடியாக தலையிட்டு சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தேயிலை வாரிய செயல் இயக்குனரை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திக்க உள்ளோம். தேயிலை வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளை ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.