திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை பணிகள் விரைவில் முடிவடையுமா? பயணிகள் எதிர்பார்ப்பு


திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை பணிகள் விரைவில் முடிவடையுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 Jun 2018 4:00 AM IST (Updated: 26 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரெயில்பாதை திட்ட பணிகளை விரைவில் முடிவடையுமா? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்,

தமிழகத்தின் கடைசி மீட்டர்கேஜ் பாதையாக திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதை இருந்து வந்தது. இந்த நிலையில் திருவாரூர்-காரைக்குடி வரையிலான மீட்டர்கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றிட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து முதல் கட்டமாக 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையிலான 72 கிலோ மீட்டர் தூர மீட்டர்கேஜ் பாதையில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

இதன் பின்னர் அக்டோபர் 19-ந் தேதி திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வரை மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து திருவாரூர்-பட்டுக்கோட்டை வரையிலான 74 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பாதையில் அதிராம்பட்டினம், தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் ஆகிய 4 ரெயில் நிலையங்கள் பெரிய ரெயில் நிலையமாக அமைக்கப்படுகின்றன.

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வரையிலான பாதையில் வாளவாய்க்கால், காட்டாறு, பாண்டவையாறு, வெள்ளையாறு, அடைப்பாறு, அரிச்சந்திரா ஆகிய 6 ஆறுகள் முக்கியமாவை. இந்த ஆறுகளின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வரையில் ரெயில்வே கேட் தவிர அனைத்து வழித்தடங்களிலும் செம்மண் சமப்படுத்தி ஜல்லி நிரப்பி சிமெண்டு கட்டைகள் அமைக்கப்பட்டு தண்டவாளம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி பாதையில் உள்ள சிறுபாலங்கள் கட்டும் பணிகள் முடிந்து, அகஸ்தியன்பள்ளி ரெயில் நிலையம் அமைக்கும் பணிகளும், முடிவடைந்து ரெயில்பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பாதையில் பாலம் கட்டுமான பணிகள் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் பணிகள் முடிவடைவதில் காலதாமதம் ஆகிறது.

இந்த நிலையில் பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல பாதையில் ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளது.

6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை பணிகள் நடப்பு ஆண்டில் முடிவதற்கு வாய்ப்பு இல்லாத நிலை நிலவி வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடையுமா? என பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரெயில் பாதையில் உள்ள கட்டுமான பணிகள், பொருட்கள் கொண்டு செல்வது போன்ற பணிகள் பாதிக்கப்படும். எனவே பணிகளை விரைந்து முடித்து ரெயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story