விளந்தை, தேளூர் கிராமத்தில் தர்ம சம்வர்த்தினி, பெரியநாயகி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்


விளந்தை, தேளூர் கிராமத்தில் தர்ம சம்வர்த்தினி, பெரியநாயகி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:00 AM IST (Updated: 26 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

விளந்தை, தேளூர் கிராமத்தில் உள்ள தர்ம சம்வர்த்தினி, பெரியநாயகி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், விளந்தை கிராமத்தில் தர்ம சம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்தல விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிங்காரவேலர், காசி விஸ்வநாதர், மகாலஷ்மி, கனகதுர்கை, நவக்கிரக மூர்த்திகள், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. கோவிலில் மேல அகத்தீஸ்வரர் மூலஸ்தான விமானம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்கள் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. நேற்று முன்தினம் 2, 3-ம் கால யாகபூஜை நடைபெற்றது. நேற்று 4-ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான ஸ்தலவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிங்காரவேலர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட சுவாமிகள் மூலஸ்தான விமானத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க தர்ம சம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் விளந்தை, ஆண்டிமடம், கொளப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் திவ்ய புஷ்ப அலங்காரத்துடன் தர்ம சம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் திருக்கல்யாண வைபவம், திவ்ய உபசார தீபாராதனை நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, ஸ்ரீ மேல அகத்தீஸ்வர சுவாமி தர்மபரிபாலன அறக்கட்டளை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் சமேத வீரபத்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சக்தி விநாயகர், காட்டேரி அம்மன், பாவாடைராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்கள் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி 1, 2, 3 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான சக்தி விநாயகர், காட்டேரி அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் மூலஸ்தான விமானத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பெரியநாயகி அம்மன் சமேத வீரபத்தர் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வி.கைகாட்டி, குடிசல், காத்தான்குடிக்காடு, விளாங்குடி, மண்ணுழி, சின்னநாகலூர், பெரியநாகலூர், ஓரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story