சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என கலெக்டர் பேட்டி


சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஆகஸ்டு 22-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தேர்வு பெற இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்,

இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சேலம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து தகுதிவாய்ந்த நபர்கள் பங்கேற்கலாம். சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன் மற்றும் ஏவியேசன், நர்சிங் அசிஸ்டெண்ட், ஜெனரல் டியூட்டி, கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.jo-i-n-i-n-d-i-a-n-a-r-my.nic.in என்ற இணையதள முகவரியில் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு மாதம் 10-ந் தேதிக்கு பிறகு ஆன்லைனில் அனுமதி சீட்டு வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டு, விண்ணப்பம் மற்றும் அனுமதி சீட்டில் குறிப்பிட்ட ஆவணங்களை ஆள்சேர்ப்பு முகாமிற்கு தவறாமல் கொண்டு வரவேண்டும். ஆள்சேர்ப்பு முகாமிற்கு வரவேண்டிய நாள் அந்தந்த அனுமதி சீட்டில் குறிப்பிடப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆள்சேர்ப்பு தொடர்பான சந்தேகங்களை இணையதள ஆர்மி காலிங் என்ற கையடக்க செயலியினை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் எவ்வித இடைத்தரகர்களையும் நம்ப வேண்டாம். தகுதியின் அடிப்படையில் மட்டுமே இப்பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர். எனவே இளைஞர்கள் மேற் குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்வதோடு அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களோடு அதில் குறிப்பிட்டுள்ள நாளில் நேரடியாக ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க வேண்டும். ராணுவ பணியில் சேர்ந்து இந்திய தேசத்தை காக்கும் பணியை பெற்று நாட்டிற்கு சேவையாற்றிட இளைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது, கோவை மண்டல இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு தேர்வுக்குழு இயக்குனர் ஆர்.ஜே.ரானே, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story