புலிகள் நடமாட்டமா? செங்கல்சூளையில் காணப்பட்ட கால் தடத்தால் பொதுமக்கள் அச்சம்


புலிகள் நடமாட்டமா? செங்கல்சூளையில் காணப்பட்ட கால் தடத்தால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:30 AM IST (Updated: 26 Jun 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே செங்கல்சூளையில் காட்டு விலங்கின் கால்தடம் பதிவாகி உள்ளது. இது, புலிகளின் கால்தடமாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர், மரப்பாலம் பகுதியில் தேவசகாயம் என்பவருக்கு சொந்தமான செங்கல்சூளை உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து வேலையில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, நேற்று அதிகாலையில் தொழிலாளர்கள் வேலை செய்ய தயாரானார்கள். அப்போது, நேற்று முன்தினம் தயாரித்து வைத்திருந்த பச்சை செங்கல் மீது காட்டு விலங்கின் கால்தடம் இருப்பதை கண்டனர்.

அந்த கால் தடங்கள் வழக்கமான விலங்குகளின் கால்தடத்தை விட பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. அவை புலியின் கால்தடமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.

 இதுகுறித்து ஆரல்வாய்மொழி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் செங்கல்சூளைக்கு சென்று பார்த்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை படம்பிடித்தனர். அதனை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று அந்த கால் தடத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதுபோல், சமத்துவபுரம் அருகே தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான செங்கல்சூளையிலும் காட்டு விலங்கின் கால்தடம் பதிவாகி இருந்தது.

செண்பகராமன்புதூர் பகுதியில் அடர்ந்த காடுகள்,  மலை பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

தற்போது பதிவாகியுள்ள கால்தடம் வித்தியாசமாக இருப்பதால் புலிகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story