செம்பட்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
செம்பட்டி அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை பஸ்நிறுத்தம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக அதிகாரிகள் சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையத்தின் ‘ஷட்டர்’ மூடி இருந்தது.
இதையடுத்து அவர்கள் ‘ஷட்டரை’ திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஏ.டி.எம். மையத்துக்குள் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராக்களின் வயர்களும் துண்டிக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஏ.டி.எம். மையத்துக்குள் மர்மநபர் ஒருவன் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி நுழைத்துள்ளான். பின்னர் மேற்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளான். மேலும் வயர்களை அறுத்துள்ளான். இதையடுத்து ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து திருட முயன்றுள்ளான்.
அப்போது ஹெல்மெட் இடையூறாக இருந்துள்ளது. இதையடுத்து ஹெல்மெட்டை மேலே லேசாக தூக்கி விட்டு எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்துக்குள் மற்றொரு கண்காணிப்பு கேமரா இருப்பது அவனுக்கு தெரியவில்லை. இதையொட்டி அவருடைய முகம் அதில் தெளிவாக பதிவானது. நீண்ட நேரம் போராடி பார்த்தும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் திருட்டு முயற்சியை கைவிட்டு அவன் திரும்பி சென்றது தெரியவந்தது.
இதற்கிடையே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றது செம்பட்டி அருகே உள்ள சொககலிங்கபுரம் கிழககு தெருவை சேர்ந்த பாண்டித்தேவர் மகன் காசிமாயன் (வயது 21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர், திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.