மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
மாசு கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி அரசின் மாசு கட்டுப்பட்டு குழும அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக சமூக அமைப்புகள் அறிவித்திருந்தன.
அதன்படி சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் புதுவை உழவர்சந்தை அருகே கூடினார்கள். அங்கிருந்து அண்ணாநகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு குழு அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், தமிழக வாழ்வுரிமை கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், தமிழர்களம் செயலாளர் அழகர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை தலைவர் பாவாடைராயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் மறைமலையடிகள் சாலை வழியாக நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே சென்றது. அப்போது தடுப்பு அமைத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் தடுப்பினையும் மீறி அவர்கள் செல்ல முயன்றனர். இதைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்ற 4 பெண்கள் 150 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.