நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் படுகாயம்: பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 4 பேர் கைது


நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் படுகாயம்: பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2018 4:30 AM IST (Updated: 27 Jun 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் படுகாயம் அடைந்த வழக்கில் பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் அறிவழகன், பெயிண்டர். இவர் தனது மனைவி மீனாட்சி (வயது 20) மற்றும் குழந்தையுடன் தங்களுக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்து ரெட்டிச்சாவடி அருகே காரணப்பட்டு கிராமத்தில் குடியேறினார். இதையடுத்து அந்த குடிசை வீடு பூட்டிக் கிடந்தது.

இந்த நிலையில் கடப்பேரிக்குப்பத்துக்கு நேற்று முன்தினம் சென்ற மீனாட்சி, அங்கு பூட்டிக்கிடந்த தனது குடிசை வீட்டை திறந்து சுத்தம் செய்தார். அப்போது ஒரு பிளாஸ்டிக் வாளியில் நாட்டு வெடிகுண்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதை வீட்டை விட்டு வெளியே எடுத்து வந்தார். அப்போது அவரது கை தவறி வாளி கீழே விழுந்ததில் நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் மீனாட்சிக்கு கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாட்டு வெடிகுண்டை பூட்டிக்கிடந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர்? யார் என்று வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான 2 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அறிவழகன் வீட்டுக்கு அவரது உறவினர் கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்த வீரமணி (19) என்பவர் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குயிலாப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடியான டான் திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளி இளையஞ்சாவடி கார்த்திக் (21) ஆகியோருக்கும், தாதா மணிகண்டன் தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

எனவே தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி முன்னெச்சரிக்கையாக எதிராளியை கொல்வதற்காக நாட்டு வெடிகுண்டை தயாரித்து குயிலாப்பாளையம் குமரேசன் (22), பொம்மையார்பாளையம் ராகுல் (21) ஆகியோர் மூலம், இவர்களின் நண்பரான வீரமணியிடம் கொடுத்து பூட்டிக்கிடந்த அறிவழகனின் வீட்டில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து டான் திருநாவுக்கரசின் கூட்டாளிகளான கார்த்திக், ராகுல், குமரேசன் மற்றும் வெடிகுண்டை பதுக்கி வைக்க உதவிய வீரமணி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story