சிதம்பரம் அருகே, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


சிதம்பரம் அருகே, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Jun 2018 11:16 PM GMT (Updated: 26 Jun 2018 11:16 PM GMT)

சிதம்பரம் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடை வழியாக செல்லும் பாதாள சாக்கடை குழாய்களை உடைத்து, கழிவுகளை பொதுமக்கள் பயன்படுத்தும் ஓடையில் கலக்க செய்த ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கழிவுகளால் லால்புரம், காமராஜர் நகர், தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி, அழிஞ்சமேடு உள்ளிட்ட கிராமங்களில் பயன்படுத்தும் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதன் காரணமாக வண்டிகேட் பகுதி முதல் புறவழிச்சாலையில் உள்ள மண்டபம் கிராமம் வரை சுமார் 5 கி.மீட்டர் தூரத்துக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாயை சீரமைத்து, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி லால்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லால்புரம் சேகர் தலைமையில் நேற்று காலை 11 மணி அளவில் சிதம்பரம் வண்டிகேட் பகுதியான கிள்ளை செல்லும் மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டதாக 50 பேரை கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story