தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை கால்டாக்சி டிரைவர் கைது
மணப்பாக்கத்தில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 40 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த கால்டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மணப்பாக்கம் காவியா கார்டன் மனோரஞ்சிதம் தெருவை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் கவுரிசங்கர். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். வீரப்பன் தனது குடும்பத்தினருடன் ஜோலார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் பரங்கிமலை உதவி கமிஷனர் மோகன்தாஸ் தலைமையில் நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவில் ஒரு கார் நீண்ட நேரமாக அந்த பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், போரூர் காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் பிரபு (வயது 27) என்பவர் காரில் சுற்றியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் பிரபுவை பிடித்து விசாரித்தனர். அப்போது பிரபு நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் போலீசாரிடம் பிரபு கூறியதாவது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நான் சொந்தமாக கார் வாங்கி அதை கால்டாக்சி நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வருகிறேன். எனக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உள்ளது. மேலும், காருக்கு மாதத்தவணை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சான்று பெற வேண்டி உள்ளது.
இதற்காக நண்பர்களிடம் கடன் கேட்டேன். யாரும் தரவில்லை. ஏற்கனவே கடன் தந்தவர்களும் பணத்தை திருப்பி கேட்டதால் மணப்பாக்கத்தில் பூட்டி கிடந்த வீட்டில் கொள்ளையடித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பிரபுவை போலீசார் கைது செய்து 40 பவுன் தங்க நகைகள், கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புகார் செய்த 12 மணி நேரத்திற்குள் கொள்ளையனை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
Related Tags :
Next Story