வள்ளியூர் அருகே போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலை உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


வள்ளியூர் அருகே போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலை  உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jun 2018 3:00 AM IST (Updated: 27 Jun 2018 6:19 PM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வள்ளியூர், 

வள்ளியூர் அருகே போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயி தற்கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளம் குமாரபுதுகுடியிருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வள்ளியூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்கு சென்று மது வாங்கி குடித்து விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வள்ளியூர்– ஏர்வாடி மெயின்ரோட்டில் சென்றபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வள்ளியூர் போலீசார் சக்திவேலை வழிமறித்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது சக்திவேல் குடிபோதையில் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளார்.

இதனால் அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவமானம் அடைந்த அவர் தனது மோட்டார்சைக்கிளில் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்ததாக தெரிகிறது. உடனே போலீசார் சக்திவேலை மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதனை தொடர்ந்து அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்

இதையடுத்து போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை சக்திவேல் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வள்ளியூர்– சித்தூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் நெல்லை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், ராதாபுரம் தாசில்தார் புகாரி, வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சக்திவேல் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும். விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சக்திவேலுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், சந்தனசெல்வன் என்ற மகனும் உள்ளனர்.


Next Story