நெல்லையில், போலி அரசு முத்திரை மூலம் வங்கிகளில் பணம் மோசடி: கைதான வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை


நெல்லையில், போலி அரசு முத்திரை மூலம் வங்கிகளில் பணம் மோசடி: கைதான வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2018 2:00 AM IST (Updated: 27 Jun 2018 7:55 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலி அரசு முத்திரையை பயன்படுத்தி வங்கிகளில் பணம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நெல்லை, 

நெல்லையில் போலி அரசு முத்திரையை பயன்படுத்தி வங்கிகளில் பணம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வருவாய் ஆய்வாளர்

நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ‘பி‘ காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர், நாங்குநேரியில் ஆதி திராவிடர் நலத்துறை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வீட்டுக்கடன், அடமான கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றை பெற்று தரும் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் பாளையங்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு வணிகவளாக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வரும் டேவிட் என்பவர் தனது மகளை, முருகன் நடத்தி வரும் அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கு 3 மாதங்கள் பணியாற்றிய அவருக்கு முருகன் சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் முருகன், டேவிட்டை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டேவிட் பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் முருகனின் அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு முத்திரைகள், ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த அரசு முத்திரைகள் போலியானவை என்பதும், அவற்றை பயன்படுத்தி பல வங்கிகளில் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் சப்–இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளர் முருகனை பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர் மீது போடப்பட்ட வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், கைது செய்யப்பட்ட விவரம் ஆகியவற்றை சேகரித்து வருகிறார்கள். இன்று (வியாழக்கிழமை) முருகன் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story