கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்: கைதான தி.மு.க.வினர் 191 பேருக்கு ஜாமீன்


கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்: கைதான தி.மு.க.வினர் 191 பேருக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 28 Jun 2018 3:45 AM IST (Updated: 28 Jun 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தி.மு.க.வினர் 191 பேருக்கு ஜாமீன் வழங்கி நாமக்கல் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாமக்கல்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 22-ந் தேதி நாமக்கல்லில் ஆய்வு செய்தார். அவரது ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய மந்திரியும், கிழக்கு மாவட்ட செயலாளருமாள காந்திசெல்வன், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. உள்பட மொத்தம் 193 பேரை போலீசார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர். இவர்களில் ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுமனுக்கு (வயது 32) உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதற்கிடையே மீதமுள்ள 192 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் வாதாடினார். இதேபோல் தி.மு.க.வினருக்கு ஆதரவாக தி.மு.க. சட்டத்துறை ஆலோசகரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான என்.ஆர்.இளங்கோ வாதாடினார். மேலும் நாமக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் வக்கீல் பார்.இளங்கோவன், மாநில சட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன் மற்றும் தி.மு.க. வக்கீல் அணியினரும் ஆஜராகினர்.

விவாதம் தொடங்கியதும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தி.மு.க.வை சேர்ந்த பாலாஜி என்பவர் மீது நாமக்கல் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை விடுவிக்க கூடாது என அரசு வக்கீல் கூறினார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பாலாஜி தவிர சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தி.மு.க.வினர் 191 பேரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். எனவே தி.மு.க. வக்கீல்கள் உற்சாகம் அடைந்தனர்.

நீதிபதியின் இந்த உத்தரவால் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தி.மு.க.வினர் இன்று (வியாழக்கிழமை) சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. வக்கீல்கள் கூறினர். 

Next Story